ஊட்டி ரோஜா பூங்காவில், நீர்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரம்

ஊட்டி ரோஜா பூங்காவில் நீர்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2019-11-24 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா உள்ளது. இந்த பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவை கொண்டது. மலைச்சரிவான இடத்தில் இயற்கை எழில் மிகுந்த பகுதியில் அமைந்து இருக்கிறது. அங்கு 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 ரகங்களை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி உள்ளது. அந்த செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் மலர்கள் பூக்கும் செடிகள் காணப்படுகிறது.

ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம். தற்போது 2-வது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து, கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. வளர்ந்த புற்களை அழகாக வெட்டுவதுடன், தொடர் மழையால் அழுகிய மலர்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ரோஜா செடிகளை நோய் தாக்காத வகையில் மருந்து தெளிப்பதோடு, இயற்கை உரம் இடப்படுகிறது.

கோடை சீசனின் போது ஊட்டி நகரில் வழக்கத்தை விட வெயில் அதிகமாக அடிக்கும். இதனால் பூங்கா வளாகத்தில் உள்ள 2 கிணறுகளில் தண்ணீர் குறைந்து, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் செடிகள் வாட தொடங்கின. இதையடுத்து வாடகைக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குழாய் மூலம் ரோஜா செடிகளுக்கு கடந்த ஆண்டு பாய்ச்சப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அதே நிலை தொடர்வதால், பூங்காவை பராமரிக்க சிரமம் ஏற்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.16 லட்சம் செலவில் ரோஜா பூங்காவின் கீழ்பகுதியில் ஊற்று பெருக்கெடுக்கும் பகுதியில் புதியதாக கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 30 அடி ஆழம், 15 அடி அகலத்தில் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊற்று தண்ணீர் அந்த கிணற்றில் பெருகியதால், நிரம்பி வழிந்தது. கிணறு 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது மேல்பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் கட்டப்படுகிறது. பம்ப் அறை கட்டப்பட்டு, அதிக திறன் உள்ள மோட்டார் மூலம் கிணற்றில் சேகரமாகும் தண்ணீர் நீர்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட உள்ளது. இதற்காக குழாய்கள் பொருத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்