எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.20 கோடியில் சீரமைப்பு 2 அடுக்குமாடியில் நவீன ‘பார்க்கிங்’ வசதி

ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் எழும்பூர் ரெயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 2 அடுக்குமாடியில் நவீன ‘பார்க்கிங்’ வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

Update: 2019-11-24 23:00 GMT
சென்னை,

சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் முக்கிய ரெயில் முனையமாக திகழ்வது சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படுவதால், எழும்பூர் ரெயில் நிலையம் ‘தென்பகுதியின் நுழைவு வாயில்’ என அழைக்கப்படுகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால், பயணிகளின் வசதிக்காக, ‘ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்தின்’ கீழ் எழும்பூர் ரெயில் நிலையத்தை சீரமைக்க தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் முடிவு செய்திருந்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியை ரெயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. தற்போது இந்த ரெயில் நிலையத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு சில ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணியின் முக்கிய அம்சமாக, எழும்பூர் ரெயில் நிலையத்தில் 5, 7, 8, 9-வது நடைமேடைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதியை மேம்படுத்த, ‘பிரீபெய்டு’ குளிரூட்டும் காத்திருப்போர் அறை, உயர் வகுப்பு, 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், உடை மாற்றும் அறைகள் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைகளில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் கழிவறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தின் முதல் மாடியில் இருக்கும் 14 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் அறைகள் மற்றும் 16 ஓய்வு அறைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 4-வது நடைமேடையில் செயல்பட்டு வந்த குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்போர் அறை, ரெயில் நிலையத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 7, 8, 9 மற்றும் 10, 11-வது நடைமேடையில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை, ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் அகல நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் புதிதாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் 2 அடுக்குமாடியில் நவீன ‘பார்க்கிங்’ கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது முன்பை விட கூடுதலாக, 100-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார ரெயில் வழித்தடத்தில், ரெயிலில் இருந்து இறங்கி வெளியேறும் போது கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டு அவதி படாமல் இருக்க, மறுபுறமும் நடைமேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் எழும்பூர் ரெயில் நிலையத்துக்குள் பயணிகள், எந்த இடையூறும் இல்லாமல் வந்து செல்ல முடியும். பயணிகளை அழைப்பதற்கு அல்லது ரெயில் நிலையத்தில் விட்டுச்செல்வதற்கு வரும் ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற வாகனங்களை நிறுத்துவதற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்படும். இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்