தூத்துக்குடியில் மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கைது

தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-11-24 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் மரிய ஐஸ்வர்யா (வயது 16). இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மரிய ஐஸ்வர்யா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைபார்த்த அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உறவினர்கள் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதில், மரிய ஐஸ்வர்யா சமீபத்தில் 2 நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர், சக மாணவர்கள் முன்னிலையில் மரிய ஐஸ்வர்யாவுக்கு 150 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்து உள்ளார். இதனால் மனஉளைச்சலில் மரிய ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளாள். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மேலும் மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மரிய ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக, வெள்ளப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ஞானப்பிரகாசம் (32), தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை கனகரத்தினம் (45) ஆகியோர் மீது தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கனகரத்தினத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்