குன்னூர் காந்திபுரத்தில் மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

குன்னூர் காந்திபுரத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்தரத்தில் வீடுகள் தொங்குகின்றன.அதனால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-11-24 00:07 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காந்திபுரம் குடியிருப்பு பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். காந்திபுரம் குடியிருப்பு பகுதி குன்னூர் நகராட்சியின் 29-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 19-ந் தேதி பெய்த கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு அருகில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் காந்திபுரத்தில் சாலை ஓரத்தில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளித்தன. அதனால் வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

குன்னூர் பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்து வருவதாலும், தடுப்பு சுவர் இல்லாததாலும் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது மட்டுமின்றி வீடுகளுக்கு முன்புறம் உள்ள நடைபாதையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டால் கிராமத்தின் நடைபாதையும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதேபோல் குன்னூரில் இருந்து ஆர்செடின், உலிக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கிளண்டேல் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் நடந்தால் பேரிழப்புகள் ஏற்படும். இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் பஸ்கள் மற்றும் வாகனங்களில்ஆபத்தான பயணம் செய்கிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதியின் கீழ் புறம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்