மாமல்லபுரம் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிக்கும் சீன மாணவர்கள்
மாமல்லபுரம் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிக்க சீன மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாமல்லபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பிறகு சீன பயணிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து பள்ளி மாணவர்களின் சுற்றுலா வருகையும் அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிக்க சீன மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் இங்கிலாந்து, சீன மாணவர்கள் 90 பேர் 4 குழுவாக மாமல்லபுரம் வந்தனர்.
அவர்கள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை குறித்தும், 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திற்கும் சீனாவுக்கும் இருந்த வணிக தொடர்பு, மாமல்லபுரம் நகரின் வரலாறு, சிற்பங்கள், சுற்றுலா மேம்பாடு, ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பயணிகளின் வருகின்றனர் என்பது குறித்து வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்காக பல்வேறு புராதன சின்னங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆய்வு கட்டுரை
மாமல்லபுரம் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிக்க உள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா, சீன மாணவர்களுடன் வந்த ஊட்டி பள்ளி ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை எழுத மாமல்லபுரம் நகரின் வரலாறுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர். புராதன சிற்பங்களை சுற்றி காண்பித்து புகைப்படம் எடுத்தும், ஒவ்வொரு சிற்பங்களின் பின்னணி தகவல், அதனை செதுக்கிய பல்லவ மன்னர்களின் விவரங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்களும் நேற்று ஆயிரக்கணக்கானோர் மாமல்லபுரம் சுற்றுலா வந்து வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் வெண்ணை உருண்டைக்கல் பகுதியில் உள்ள வழுவழுப்பான பாறை பகுதியில் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர்.
தொல்லியல் துறையும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக சலுகை அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.