ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி மாநாடு நல்லகண்ணு பேட்டி

ஆணவ படுகொலையை தடுக்க தனிசட்டம் இயற்றக்கோரி மாநாடு நடத்தப்படும் என்று நல்லகண்ணு பேட்டி அளித்தார்.

Update: 2019-11-23 23:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகமான முத்து மகாலில், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில துணை தலைவர் முன்னாள் எம்.பி.லிங்கம், மாநில பொது செயலாளர் வீரபாண்டியன், மாநில செயலாளர் சிவா, தலைமை குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட செயலாளர் பழனி குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2-வது முறையாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்துள்ள பா.ஜனதா அரசாங்கம் மாநில அரசின் உரிமைகளை மீறி ஜனநாயக விரோத முறையை கடைப்பிடித்து வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஆட்சிக்குவர முடியாமல் தடுக்கும் வகையில் அந்தந்த மாநில ஆளுனர்களை கையில் கொண்டு ஆட்சியை மாற்றி வருகின்றனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை ஆட்சி அமைக்க விடாமல் சூழ்ச்சியால் ஆட்சியின்கீழ் வரும்படி செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் ஒரு நிலைமை இருந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் ஆணவ கொலை, பாலியல் வன்முறை என்பதும் அதிகரித்து உள்ளது. ஆண்டுக்கு சுமார் 150 பேர் கொலை செய்யப்படுகின்றனர். இதை தடுக்க தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தனி மாநாடு நடத்த இக்கூட்டத்தில் திட்டமிட்டுள்ளோம்.

மதுரை அருகே மேலவளவு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 7 தலித்துகள் கொல்லப்பட்டனர். இக்குற்றத்தை புரிந்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் புரிந்தவர்கள் தண்டனை காலம் நிறைவடையும் முன்னதாகவே அ.தி.மு.க. அரசு விடுதலை செய்தது ஜனநாயக விரோதமானது இதை இந்திய கம்யூனிஸ்டு கண்டிக்கிறது.

தமிழகத்தில் தீண்டாமை அதிகரித்து வருகிறது. சுடுகாடுக்கு செல்லக்கூட தனி பாதையை பயன்படுத்த கட்டாயப் படுத்தப்படுகின்றனர். தீண்டாமை ஒழிக்கப்பட்டு தற்போது வரை பல கிராமங்களில் தீண்டாமை என்பது இருந்து வருகிறது. இதுபோன்ற தீண்டாமை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் சமத்துவத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

உள்ளாட்சி துறையில் தான் ஜனநாயகம் இருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க விடாமல் பண பலத்தைக் கொண்டு மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே மறைமுகத் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். இலங்கை தேர்தலில் வாரிசு அடிப்படையில் கோத்தபய ராஜபக்சே தனது சகோதரரான மகிந்த ராஜபக்சேவை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார்.இவர்கள் இருவரும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆபத்தானவர்கள்.

இன்று வரை லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழக மீனவர்களின் படகுகள் கச்சத்தீவில் உள்ளன. இவர்களை மத்திய அரசு இந்தியாவிற்குள் வரவேற்பது சரியானதல்ல. இலங்கை அதிபர் தமிழகத்திற்குள் வருவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம். ரஜினி கூறிய அதிசயம் என்ன என்பது எங்களுக்கு தெரியாது. அதிசயத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தான் நியாயம். அனைத்து தரப்பினரின் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க உண்டான உத்தரவாத நடவடிக்கையை ஆட்சியாளர்கள் எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்