சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரை ஆதரித்து பி.எல்.சந்தோஷ், மந்திரி சி.டி.ரவி பிரசாரம் நடிகர்-நடிகையும் வாக்கு சேகரித்தனர்

சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரை ஆதரித்து பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மந்திரி சி.டி.ரவி மற்றும் நடிகர்-நடிகை ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

Update: 2019-11-23 23:15 GMT
கோலார் தங்கவயல்,

கர்நாடகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார்கள். சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ. சுதாகர் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர் சுதாகரை ஆதரித்து நேற்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சுற்றுலா துறை மந்திரி சி.டி.ரவி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் சுதாகரை ஆதரித்து கன்னட நடிகை ஹர்ஷிதா பூஞ்சா, நடிகர் திகத் ஹெக்டே ஆகியோரும் மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

இந்த பிரசாரத்தின்போது பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசுகையில், பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக சுதாகர் போன்றவர்கள் எடுத்த முடிவு சிறந்தது. அவர்களின் தொகுதிகளுக்கு கூட்டணி ஆட்சியில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பா.ஜனதா ஆட்சி அமைய முடிவு செய்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மக்கள் பணி செய்வதற்காக மீண்டும் சுதாகருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மந்திரி சி.டி.ரவி பேசுகையில், இது இங்குள்ள மக்களின் சுயமரியாதை தேர்தல் ஆகும். சுதாகர் சிக்பள்ளாப்பூரை சேர்ந்தவர். அதனால் அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மற்ற இருகட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சிக்பள்ளாப்பூரில் உள்ள குறைகள் தெரியாது. நீங்கள் மீண்டும் சுதாகருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பா.ஜனதா வேட்பாளர் சுதாகர் பேசுகையில், கூட்டணி ஆட்சியில் சிக்பள்ளாப்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தடைபட்டன. சிக்பள்ளாப்பூருக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரி, கனகபுராவுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து குமாரசாமியிடம் கேட்டதற்கு, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் தான் நான் ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்தேன். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி உள்ளது. எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடித்தால் மட்டுமே மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறும். எடியூரப்பா ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்