மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து கொன்றவருக்கு தூக்குத்தண்டனை விதித்திருக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு கருத்து

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தவருக்கு தூக்குத்தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.

Update: 2019-11-22 22:15 GMT
மதுரை,

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இளம் வயதில் 2 மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடந்த 3.7.2012 அன்று இரவில் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அங்குள்ள குவாரி பகுதிக்கு சென்று அவரது சகோதரி மற்றும் சிலர் தேடியபோது, அதே பகுதியை சேர்ந்த ஈசுவரன் என்பவர் சந்தேகத்துக்கு இடமாக வந்தார். அவரிடம் விசாரித்தபோது, மனநலம் குன்றிய அந்த இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குபதிவு செய்து, ஈசுவரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், பெண்ணை கற்பழித்து கொலை செய்ததற்காக ஈசுவரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், இதை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஈசுவரன், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த பரபரப்பு உத்தரவில் கூறியுள்ளதாவது:-

கற்பழிப்பு என்பது கொலையை விட மோசமானது. இதில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டால் அவர் பின்விளைவுகளை சமாளிக்க தேவையில்லை. ஆனால் உயிருடன் இருந்தால், அந்த சம்பவம் பற்றிய பல்வேறு நினைப்பே நிமிடத்துக்கு நிமிடம் மோசமான வலியை தரும். அதிலும் மனநலம் குன்றிய பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாவது மிகவும் வேதனையானது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

“இரவு நேரங்களில் சாலையில் ஒரு பெண் தன்னந்தனியாக சுதந்திரமாக செல்லும் நாள் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுவேன்” என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.

தற்போது நம் நாட்டில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார்கள். அவர்களின் நலனை கருதி, கொள்கை நிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், நம் நாடு பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நிலையை ஏற்படுத்தலாம். இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

வளைகுடா நாடுகள், அரபு நாடுகளில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்தி கல் எறிந்து கொல்கின்றனர். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது.

இந்த வழக்கில் மனுதாரருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை.

எதார்த்தமாக அமைந்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டு உள்ளார்.

எனவே மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்