குப்பைகளை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
குப்பைகளை அகற்ற கோரி தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்படுவதால் அதன் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து பயணிக்கும் சூழலில் குடிநீர், கழிப்பறை வசதி உடனே செய்ய வேண்டும்.
தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர், குழிப்பறை, நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். பல ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையத்தில் சிறு கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் சீரழிந்துள்ளதால் தற்காலிக பஸ் நிலையத்தில் அவர்கள் கடை நடத்த இடம் கொடுக்க வேண்டும்.
தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகே ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட வேண்டும். கட்டிட பணிகள் முடித்து அதே இடத்தில் ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
தெற்குஅலங்கம், ராஜராஜன் வணிக வளாகம், திருவள்ளுவர் வணிக வளாகத்திலும் கடை நடத்துபவர்களுக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமான பணி முடிந்தவுடன் அதே இடத்தில் கடைகள் வழங்க வேண்டும். நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, சிவகுரு, சரவணன், ராஜன், அரவிந்தசாமி, மாநகர குழு உறுப்பினர்கள் மனோகரன், ராஜன், சுந்தர், அப்துல்நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.