சூழலியல் மண்டலத்தில் குடியிருப்பு பகுதிகளை இணைக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

சூழலியல் மண்டலத்தில் குடியிருப்பு பகுதிகளை இணைக்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2019-11-21 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி, வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பது தொடர்பாக ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் மூலமாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆனால் பேரூராட்சி பகுதிகளில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே பேரூராட்சி பகுதியிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் சில இடங்களில் வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட இருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு அமைக்கும் போது விவசாயம் பாதிக்கப்படும். வில்லுக்குறி பகுதியில் தற்போது நிலத்தை விற்க முடியவில்லை. எனவே சூழலியல் மண்டலத்தில் குடியிருப்பு பகுதிகளை இணைக்க கூடாது.

நாகர்கோவில் கோட்டார் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. கால்வாயில் ஒரு திருமண மண்டபமும் உள்ளது. எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். பழையாற்று கால்வாயில் இருந்து செட்டிகுளம் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே செட்டிகுளம் கால்வாயில் செல்லும் தண்ணீரை பூச்சாத்தான்குளத்துக்கு திருப்பிவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல்

குமரி மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன. இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எனவே இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் சில கிராமங்களின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. எனவே வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்.

குருந்தன்கோடு பகுதியில் செருப்பன்கோடு குளத்துக்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயிருக்கிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்க வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.

கலெக்டர் பதில்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில் கூறியதாவது:-

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. பேரூராட்சி பகுதிகள் தங்களது கோரிக்கை தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் வந்து மனு அளிக்கலாம். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சில இடங்களில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மண்டலத்துக்குள் வருகிறது. அதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோட்டார் கால்வாயை வருகிற நிதி ஆண்டில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல செட்டிகுளம் கால்வாயில் செல்லும் தண்ணீரை பூச்சாத்தான்குளத்துக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உதவியுடன் திருத்தம் செய்யப்படும். கம்ப்யூட்டர் பட்டா மூலமாக தங்களது பெயர் களை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம். குருந்தன்கோடு பகுதியில் ஆய்வு நடத்தியதில் கால்வாயை ஆக்கிரமித்து டீ கடை மற்றும் ஒரு வீடு உள்ளது தெரியவந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளார். எனவே தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதுதொடர்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

முன்னதாக கூட்டத்தில் இந்த ஆண்டு பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் மொத்தம் 671.89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை காட்டிலும் 120.19 மில்லி மீட்டரும், கடந்த ஆண்டை காட்டிலும் 14.01 மில்லி மீட்டரும் அதிகம் ஆகும்.

இதே போல வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் மாதத்தில் 388.85 மில்லி மீட்டரும், நவம்பர் மாதத்தில் தற்போது வரை 56.39 மில்லி மீட்டரும் பெய்துள்ளது. 

மேலும் செய்திகள்