பண்ணை குட்டை அமைக்க 100 சதவீதம் மானியம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
பண்ணை குட்டை அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 100 அடி நீளம், அகலம், 5 அடி முதல் 6 அடி வரை ஆழம் கொண்ட பண்ணை குட்டையை அமைத்து கொள்ளலாம்.
இந்த பண்ணை குட்டையானது பட்டா இடத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். வயலின் அமைப்புக்கு ஏற்ப நீள, அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். பண்ணைக்குட்டைக்கு மழைநீரை கொண்டு செல்லும் விதமாக குழாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களும், பண்ணைக்குட்டையில் இருந்து உபரிநீர் வெளியேறும் விதமாக குழாய்களும் அமைக்கப்படுகின்றன.
விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் வரைபடத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வறட்சியில் இருந்து மீள மழைநீரை தேக்கி வைக்க சிறந்த ஊக்கியான பண்ணை குட்டைகளை அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு துணை கோட்ட உதவி செயற்பொறியாளரையும், கோபி துணை கோட்ட உதவி செயற்பொறியாளரையும் தொடர்பு கொண்டு, இந்த திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.