மாநிலங்களவையில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் இருக்கை 5-வது வரிசைக்கு மாற்றம் சிவசேனாவின் குரலை ஒடுக்க எடுக்கப்பட்ட முடிவு என குற்றச்சாட்டு
மாநிலங்களவையில் 5-வது வரிசையில் தனக்கு இருக்கை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது சிவசேனாவின் குரலை ஒடுக்க வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் சஞ்சய் ராவத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.;
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர், சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி என முழங்கியவர் சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத். சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியை பாரதீய ஜனதா கொடுக்க மறுத்ததை அடுத்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் நிலவிய குழப்பத்திற்கும் காரணகர்த்தாவாக அறியப்படும் சஞ்சய் ராவத் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனாவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்கு முழுமூச்சாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் 3-வது வரிசையில் இருந்த அவரது இருக்கை திடீரென 5-வது வரிசைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ள சஞ்சய் ராவத் இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
சிவசேனாவின் குரலை ஒடுக்க...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த தேவையில்லாத நடவடிக்கை எதற்கு எடுக்கப்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. சிவசேனா கட்சியின் உணர்வுகளை புண்படுத்தவும், எங்களது குரலை ஒடுக்கவும் வேண்டுமென்றே யாரோ இந்த முடிவை எடுத்து உள்ளனர் என கருதுகிறேன். என்னையும், சிவசேனாவின் அந்தஸ்தையும் அவமானப்படுத்துவதற்காகவே தற்போது 5-வது வரிசைக்கு இருக்கை மாற்றப்பட்டு உள்ளது.
எனவே எனக்கு முதலாவது, இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.