மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு: வில்லியனூர் மருத்துவமனை முன்பு நூதன போராட்டம் போலீசாருடன் தள்ளு முள்ளு

அரசு ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டை கண்டித்து கிராமப்புற மக்கள் இயக்கத்தினர் சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Update: 2019-11-20 23:00 GMT
வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைபெற வரும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை என்று எழுதி வைக்கப்பட்டது. மேலும் இந்த மாத்திரைகள் புதுவை அரசு மருந்தகத்தில் இருப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் இங்கு போதுமான அடிப்படை வசதிகள், அவசர கால சிகிச்சை அளிக்க வசதி இல்லாததை கண்டித்தும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுவை மாநில கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமையில் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வில்லியனூர் எம்ஜிஆர் சிலையிலிருந்து சங்கு ஊதி மேளம் அடித்து மலர்வளையம் கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அரசு மருத்துவமனை முன்பு வந்ததும் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போலீசாருடன் தள்ளு முள்ளு

இந்த ஊர்வலத்தில் புதுவை மாநிலத்தில் உள்ள பொதுநல இயக்கங்களான மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திராவிடர் விடுதலை இயக்கம் பெரியார் திராவிட இயக்கம் மக்கள் உரிமை கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்களை வில்லியனூர் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் இன்ஸ்பெக்டர் பழனிவேலு சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் போலீசாருடன் தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண நிலையத்தில் அடைத்தனர்.தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்