15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: சிக்பள்ளாப்பூர் தொகுதி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மனு தள்ளுபடி - மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள்
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
பெங்களூரு,
சிக்பள்ளாப்பூர் தொகுதியின் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மனுக்களை வாபஸ்பெற கடைசிநாள் ஆகும்.
அதாவது அதானி, கோகாக், காக்வாட், விஜயநகர், எல்லாப்பூர், ராணிபென்னூர், இரேகெரூர், கே.ஆர். பேட்டை, உன்சூர், மகாலட்சுமி லே-அவுட், கே.ஆர்.புரம், சிவாஜிநகர், யஷ்வந்தபுரம், ஒசக்கோட்டை, சிக்பள்ளாப்பூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
இதில் 15 தொகுதி களிலும் சேர்த்து மொத்தம் 248 பேர் 355 மனுக் களை தாக்கல் செய்தனர். இவற்றில் 128 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 28 பேரும், குறைந்தபட்சமாக கே.ஆர்.பேட்டையில் 8 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கடைசி நாளில் அதாவது நேற்று முன்தினம் ஒரே நாளில் 152 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் கே.பி.பச்சேகவுடாவின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதே கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணா என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டது. இதனால் அவருக்கு ஜனதா தளம்(எஸ்) ‘பி பாரம்‘ வழங்கியுள்ளது.
15 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அவர் காங்கிரஸ் கட்சியின் ‘பி பாரம்’ தாக்கல் செய்ய தவறியதால், மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகமொத்தம், அதானி தொகுதியில் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 20 மனுக்கள் ஏற்கப்பட்டன. சிக்பள்ளாப்பூர் தொகுதியில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 14 மனுக்கள் சட்டப்படி சரியாக இருந்ததால் அவை ஏற்கப்பட்டன.
கோகாக் தொகுதியில் மொத்தம் 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இரேகெரூர் தொகுதியில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 18 மனுக்களும் சட்டப்படி இருந்ததால், அவை அனைத்தும் ஏற்கப்பட்டன. ஒசக்கோட்டை தொகுதியில் மொத்தம் 33 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 30 மனுக்கள் ஏற்கப்பட்டன.
உன்சூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 31 வேட்புமனுக்களும் முறைப்படி இருந்ததால் ஏற்கப்பட்டன. காக்வாட் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவற்றில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 11 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ராணிபென்னூர் தொகுதியில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யும்போது, சட்டப்படி தேவையான விவரங்கள் இல்லை என்று கூறி ஒரு மனுவை தள்ளுபடி செய்தனர். மீதமுள்ள 20 மனுக்கள் ஏற்கப்பட்டன. விஜயநகரில் 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 20 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
எல்லாப்பூர் தொகுதியில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 19 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. யஷ்வந்தபுரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 20 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவாஜிநகர் தொகுதியில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 33 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கே.ஆர்.பேட்டை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன. மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கே.ஆர்.புரம் தொகுதியில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 15 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் மொத்தம் 355 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது நேற்று நடந்த பரிசீலனையில் மொத்தம் 54 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 301 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏற்கப்பட்ட வேட்புமனுக் களை வாபஸ் பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினம் ஒவ்வொரு தொகுதியிலும் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.