கார்த்திகை மாதம் முதல் நாள்: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.;

Update: 2019-11-18 00:02 GMT
புதுச்சேரி,

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை முதல் நாளான நேற்று புதுவையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

புதுவை பாரதிபுரம் அய்யப்பன் கோவில், மணக்குள விநாயகர் கோவில் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் குருசாமிகளின் பாதங்களை தொட்டு வணங்கி அவர்களது கைகளால் மாலை அணிந்து கொண்டனர்.

அய்யப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் காலங்களில் அவர்களும், அவர்களது வீட்டில் இருப்பவர்களும் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். எனவே புதுவையில் நேற்று மீன், இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிடக் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஏற்கனவே புதுவையில் காய்கறிகளின் விலை உயந்துள்ள நிலையில் தற்போது அய்யப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்வதால் காய்கறிகளின் தேவை அதிகரித்து அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது.

பாரதிபுரம் அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் பிரம்மோற்சவ கொடியேற்றமும், சாமிக்கு சிறப்பு ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (திங்கட் கிழமை) காலை 11 மணிக்கு உற்சவபலி நடக்கிறது. வருகிற 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பள்ளிவேட்டையும் (சாமி ஊர்வலமாக வேட்டைக்கு செல்லுதல்), 22-ந் தேதி காலை 9.30 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 23-ந் தேதி காலை 9.30 மணிக்கு கலசாபிஷேகம், சந்தனாபிஷேகம், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

மேலும் செய்திகள்