டீசல் டேங்கர் லாரியில் தீ டிரைவர், கிளீனர் கருகி சாவு நாக்பூரில் பரிதாபம்

நாக்பூரில் டீசல் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-11-17 23:35 GMT
நாக்பூர், 

நாக்பூரில் டீசல் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

டயர் வெடித்தது

நாக்பூர்- அமராவதி சாலையில் நேற்று டீசல் டேங்கர் லாரி ஒன்று நாக்பூரில் இருந்து கொண்டாலி பகுதி நோக்கி சென்றுகொண்டு இருந்தது. மதியம் 2 மணி அளவில் நாக்பூர் துடாலா கிராமத்தை நெருங்கியபோது அந்த லாரியின் டயர்களில் ஒன்று திடீரென வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக தறிகெட்டு ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

கருகி சாவு

விபத்துக்குள்ளான அடுத்த நொடியே லாரியின் முன்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. டிரைவரும், கிளீனரும் லாரியில் இருந்து கீழே இறங்குவதற்கு சற்றும் நேரம் கொடுக்காமல் கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது.

கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எர்ந்த தீயினால் லாரிக்குள் சிக்கிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் கரும்புகையுடன் குபுகுபுவென லாரியில் எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர். டீசல் டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. அதுமட்டுமின்றி அந்த சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்தில் லாரியின் நம்பர் பிளேட், ஆவணங்கள் உள்பட அனைத்தும் எரிந்து நாசமானதால் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்