பழனி அருகே வினோதம்: துணியால் கண்களை கட்டி எழுத்துக்களை வாசிக்கும் பள்ளி மாணவி

பழனி அருகே, துணியால் கண்களை கட்டி எழுத்துக்களை பள்ளி மாணவி வாசிக்கிறார்.

Update: 2019-11-17 22:30 GMT
பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வி.கே.மில்ஸ் என்.டி.நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன்-ஜோதி தம்பதியின் மகள் ராகவி (வயது 12). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறாள். இவள், தனது கண்களை துணியால் கட்டிக் கொண்டு படிப்பது, எழுதுவது, வாசிப்பது, ஒரு பொருள் மற்றும் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தின் நிறம் ஆகியவற்றை கூறி அசத்துகிறாள்.

இந்த வினோத செயல் மூலம் அப்பகுதி மக்களின் கவனத்தை மாணவி ஈர்த்துள்ளாள். இது எப்படி சாத்தியமானது? என்று அந்த மாணவியிடம் கேட்டோம். அப்போது அவள் நம்மிடம் கூறியதாவது:-

கண்கள் இல்லாமல் நாம் எதையும் பார்க்க முடியாது. ஆனால் பார்த்தவற்றை நம் மூளையின் உதவியுடன் அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை நினைவுக்கு கொண்டு வர முடியும். அதன் அடிப்படையிலேயே எனது முயற்சியும் சாத்தியமானது. இதற்காக ஒரு சிறு பயிற்சியும் மேற்கொண்டேன்.

அதாவது, ‘பிரைட்டர் மைன்ட்’ என்ற ஒரு வகை பயிற்சியின் மூலம் நாம் ஒரு பொருளை தொட்டு அதை, உணர்ந்தாலே அதன் நிறம், வடிவம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.

நான் படிக்கும் பள்ளியில் கோடைகால விடுமுறை விடப்பட்ட போது, எனது குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்றேன். அங்கு எனது உறவினர் ஒருவர் ‘பிரைட்டர் மைன்ட்’ பயிற்சி குறித்து தெரிவித்தார். இதையடுத்து 10 நாட்கள் அவரிடம் பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது, எனது கண்கள் துணியால் கட்டப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் கதை, பாட்டு, இசை ஆகியவற்றின் மூலம் எனது மனதை ஒருநிலைப்படுத்த பயிற்சி கொடுத்தார். அத்துடன் தியான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பின்னர் ஐதராபாத்தில் இருந்து பழனிக்கு திரும்பிய பிறகு, ஒரு நாள் வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த போது கண்களை கட்டிக்கொண்டு படித்து பார்க்கலமா? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. உடனே எனது கண்களை கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தேன், அதைப்பார்த்த எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் நான் பயிற்சி பெற்றது அவர்களுக்கு தெரியாது. பின்னர் அவர்களுக்கு அதுகுறித்து தெரிவித்தேன். அதன் பின்னர் எனக்கு பெற்றோர் ஊக்கமளித்தனர்.

இதனால் செல்போனில் வரக்கூடிய சிறிய எழுத்துகளை கண்களை கட்டிக்கொண்டு வாசிப்பது, கண்களை கட்டிக் கொண்டு மொபட் ஓட்டுவது ஆகியவற்றுக்கு பயிற்சி பெற்று வருகிறேன். விரைவில் துணியால் கண்களை கட்டிக்கொண்டு மொபட் ஓட்டுவேன்.

இவ்வாறு மாணவி ராகவி கூறினாள்.

மேலும் செய்திகள்