திருவையாறு அருகே, தொழிலாளி கொலை; 4 பேர் மீது வழக்கு

திருவையாறு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-11-17 23:00 GMT
திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் டென்னிஸ்ராஜ் (வயது38). இவர் விவசாய தொழிலாளி. இவருக்கு சூர்யா என்ற மனைவியும், கார்ட்வின்(9) என்ற மகனும், கரன்சியா(7) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த டென்னிஸ்ராஜை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த வக்கீல் சுதாகர்(40) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டென்னிஸ்ராஜின் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார், அம்மன்பேட்டையை சேர்ந்த பாபா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் எதற்காக கொலை நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த அம்மன்பேட்டை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்