வாழைத்தாரை பழுக்க வைக்க தனி அறை கட்ட வேண்டும் வியாபாரிகள் வலியுறுத்தல்

திருக்காட்டுப்பள்ளியில் வாழைத்தாரை பழுக்க வைக்க தனி அறை கட்ட வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2019-11-16 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளியில் வாழைத்தாரை பழுக்க வைக்க தனி அறை கட்ட வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வாழைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டுக்கு திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இவ்வாறு கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் ஏலம் விடப்படுகின்றன.

வாழைத்தார் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். பூவன், ரஸ்தாலி, பச்சைநாடன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைத்தார்கள் இங்கு விற்பனையாகி வருகின்றன. காவிரி கரையோரத்தில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள மார்க்கெட்டுகளிலும் தனி மவுசு உள்ளது.

தனி அறை இல்லை

திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் ஏலத்தில் விடப்படும் வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி அங்கு உள்ள அறையில் பழுக்க வைத்து வந்தனர். இந்த அறை தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் கதவுகள் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் வாழைத்தார்களை பழுக்க வைக்க தனி அறை இல்லாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே வாழைத்தார்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க வசதியாக தனி அறை கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களுக்கு பல ஊர்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இங்கு வாழைத்தாரை பழுக்க வைக்க தனி அறை இல்லாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகிறோம். முன்பு பயன்பாட்டில் இருந்த அறை பழுதடைந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு அதிக அளவில் வாழைத்தார்கள் விற்பனைக்கு வர உள்ளது. எனவே வாழைத்தாரை பழுக்க வைக்க தனி அறையை விரைவில் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்