ஆட்சி அமைப்போம் என கூறும் பா.ஜனதா முதலில் பின்வாங்கியது ஏன்? தேசியவாத காங்கிரஸ் கேள்வி

மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம் என கூறும் பாரதீய ஜனதா முதலில் பின்வாங்கியது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-11-16 22:30 GMT
மும்பை, 

மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம் என கூறும் பாரதீய ஜனதா முதலில் பின்வாங்கியது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

நவாப் மாலிக் பேட்டி

கொள்கை அடிப்படையில் வேறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வரும் நிலையில், பாரதீய ஜனதாவும் விரைவில் ஆட்சி அமைப்போம் என திடீரென அறிவித்தது. சிவசேனா புதிய கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தால் அந்த அரசு 6 மாதம் கூட நீடிக்காது என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

இது தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

145 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் யாரும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது. பாரதீய ஜனதாவிடம் சொந்த எம்.எல்.ஏ.க்கள் இல்லை. மற்ற கட்சியில் இருந்து சேர்ந்தவர்கள் அங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளனர்

பாரதீய ஜனதாவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாததால், மாற்று கட்சியில் இருந்து விலகி அந்த கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பதறி போய் இருக்கிறார்கள்.

பின்வாங்கியது ஏன்?

பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதை போல, அக்கட்சியின் ஆட்சி அமைப்பதற்கான பலம் இருந்து இருந்தால் ஏன் முதலில் பின்வாங்கி னார்கள்?.

தேவேந்திர பட்னாவிஸ் தோல்வி அடைந்த ராணுவத்தின் ஜெனரலை போல தனது கட்சியில் உள்ளவர்களை தேற்றிக் கொண்டு இருக்கிறார்.

அவர்கள் (பாரதீய ஜனதா) தோற்றுவிட்டார்கள் என்றே கருதுகிறோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தோல்வியை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட்டை போல அரசியலிலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என மராட்டிய அரசியலுடன் கிரிக்கெட்டை ஒப்பிட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியது பற்றி கேட்டதற்கு பதில் அளித்த நவாப் மாலிக், “பாரதீய ஜனதாவை மக்கள் 'கிளீன் போல்டு' ஆக்கி விட்டார்கள் என்பதை நிதின் கட்காரி புரிந்து கொள்ளவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்