ஓடும் ரெயிலில் மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை ஆசாமிக்கு வலைவீச்சு

ஓடும் ரெயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-11-16 23:30 GMT
மும்பை,

ஓடும் ரெயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டியை தாக்கி கொள்ளை

மும்பை தாதர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மான்சி (வயது 62). இவர் சம்பவத்தன்று பால்கரில் இருந்து ஆமதாபாத் - மும்பை பயணிகள் ரெயிலில் மும்பை வந்துகொண்டிருந்தார். அவர் ரெயிலின் மத்திய பகுதியில் உள்ள பெண்கள் பெட்டியில் இருந்தார். மதியம் 2.15 மணியளவில் ரெயில் போரிவிலி வந்தவுடன் அந்த பெட்டியில் இருந்து பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். மான்சி மட்டும் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் ரெயில் அங்கு இருந்த புறப்பட்ட போது ஒருவர் ஓடி வந்து அந்த பெட்டியில் ஏறினார். அவர் ரெயில் கிளம்பியவுடன் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்தார். பின்னர் பிளாட்பாரத்தில் குதித்து தப்பி சென்றார். அவர் ரெயில் மெதுவாக சென்ற நேரத்தில் இறங்கி தப்பி ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கொள்ளையனுக்கு வலைவீச்சு

இந்தநிலையில் ரெயில் மும்பை சென்டிரல் வந்தவுடன் மூதாட்டி நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போரிவிலி ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கொள்ளையனின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் படத்தை வைத்து அவனை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்