மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கீழவீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் அகற்றப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கீழவீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-11-16 22:00 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கீழவீதியில் ரேவதி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலிமனை உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பை கழிவுகளை கொட்டி வந்தனர். இதனால் அந்த காலிமனையில் குப்பை கழிவுகள் அதிக அளவில் தேங்கியது.

இதுகுறித்து அந்த காலிமனை உரிமையாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், குப்பை கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு சொந்தமான காலிமனையில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை பொக்லின் எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தி புனுகீஸ்வரர் கீழவீதியில் சாலையோரத்தில் கொட்டி உள்ளார்.

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு சாலையை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தொற்றுநோய் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்