விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்
விபத்தில் டிரைவர் பலியான வழக்கில் திடீர் திருப்பமாக கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கூலிப்படையினர் டிரைவரை கொலை செய்தது தெரிய வந்தது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த் பாபு (வயது 46). இவர் உத்தனப்பள்ளி அருகே நாயக்கனப்பள்ளியில் அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி நீலிமா (42). கடந்த 11-ந் தேதி ஆனந்த்பாபுவும், நீலிமாவும் காரில் கம்பெனிக்கு சென்றனர். பின்னர் இரவு நீலிமா கம்பெனியில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த காரை கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த முரளி (25) என்பவர் ஓட்டி சென்றார். கார் உத்தனப்பள்ளி - ஓசூர் சாலையில் சானமாவு வனப்பகுதியில் இரவு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, கார் மீது மோதியதாகவும், இதில் காரும், லாரியும் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்பட்டது.
இதில் காரை ஓட்டி சென்ற முரளி உடல் கருகி பலியானார். நீலிமா பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். லாரியின் டிரைவர் மாயமாகி இருந்ததால், முதலில் இதை விபத்து வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அது விபத்து இல்லை, திட்டமிட்டு கூலிப்படையை ஏவி நடத்தப்பட்ட படுகொலை என்பது தெரிய வந்தது. விபத்து நடந்த இடத்தில் லாரியும், காரும் நின்ற விதத்தை பார்க்கும் போது, 2 வாகனங்களும் மோதினாலும் எரிய வாய்ப்பு அதிகம் இல்லை என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இது விபத்தாக இல்லாமல் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:- ஆனந்த்பாபு புதிதாக தொழில் ஒன்றை தொடங்க இருந்தார். இது அவருக்கு நெருங்கிய ஒருவருக்கு பிடிக்கவில்லை. ஆனந்த்பாபு தொழில் தொடங்கினால் தனது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணிய அவர், ஆனந்த்பாபுவிடம் நீ தொழிலை தொடங்காதே என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆனந்த்பாபுவையும், அவரது மனைவியையும் தீர்த்து கட்ட அந்தநபர் முடிவு செய்தார். கொலை செய்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், அவர்களின் கார் மீது லாரியை மோத விட்டு விபத்து போல ஏற்படுத்தி கொன்று விட்டால் கண்டுபிடிக்க முடியாது என எண்ணினார்.
இதற்காக அந்தநபர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் லாரி ஒன்றில் ஓசூர் வந்தனர். இங்கிருந்தவாறு அவர்கள் ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா ஆகியோரை தீர்த்து கட்ட நோட்டமிட்டனர். அவர்கள் அடிக்கடி காரில் செல்வதை பார்த்து கார் மீது லாரியை மோத விட்டு கொல்ல முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 11-ந் தேதி இரவு அவர்கள் வரும் காரை நோட்டமிட்டு வந்தனர். அப்போது ஆனந்த்பாபு திடீரென்று தனது நண்பர்களை சந்திக்க செல்வதாகவும், டிரைவருடன் காரில் வீட்டிற்கு செல்லுமாறும் நீலிமாவிடம் கூறினார். அதன்படி நீலிமாவும் காரில் டிரைவருடன் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். சானமாவு அருகே கார் சென்ற போது எதிரே டிப்பர் லாரியில் வந்த கூலிப்படையினர், கார் மீது மோதினார்கள்.
பின்னர் அந்த காரின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதில் டிரைவர் கருகி இறந்தார். நீலிமா படுகாயம் அடைந்தார். அதற்குள் அந்த இடத்திற்கு பொதுமக்கள் வருவதை பார்த்த கூலிப்படையினர் வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 2 பேர் சிக்கி உள்ளனர். தப்பி ஓடிய மதுரையை சேர்ந்த கூலிப்படையினரை போலீசார் தேடி வருகிறார்கள். அதே போல இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சினிமாவை மிஞ்சும் வகையில் கார் மீது லாரியை மோத விட்டு, பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்து, அதை விபத்து போல நாடகமாடிய சம்பவம் உத்தனப்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.