விவசாயிகளுக்கு ரூ.1,779 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.1,779 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2019-11-16 23:00 GMT
திண்டுக்கல், 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 66-வது கூட்டுறவு வார விழா திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் தங்களது பொது பொருளாதார தேவைகளை மேம்படுத்திக்கொள்ள தாங்களே இணைந்து சமத்துவ அடிப்படையில் இயங்கும் முறையே கூட்டுறவாகும். இதனை சிறப்பிக்கும் வகையிலும், கூட்டுறவு சங்கங்களின் சேவையை கவுரவிக்கும் வகையிலும் ஆண்டு தோறும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. குறைந்த வட்டியில் பயிர்க்கடன், சிறுதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் 1 லட்சத்து 66 ஆயிரத்து 149 பேருக்கு ரூ.1,779 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 14 ஆயிரத்து 340 பேருக்கு ரூ.62 கோடியே 80 லட்சம் முதலீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஏற்கனவே சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரக்கால கடன், நீண்ட கால கடன் என மொத்தம் ரூ.5 ஆயிரத்து 780 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை ரூ.996 கோடியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.126¾ கோடியும் வைப்புத்தொகையாக பெறப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 185¼ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. எழுச்சி பெறும். தி.மு.க. வீழ்ச்சியடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 490 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார். அதையடுத்து மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருது, திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டது. விருதை சங்க தலைவர் பாரதிமுருகன் பெற்றுக்கொண்டார். விழாவில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், துணை தலைவர் கண்ணன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உமாமகேஸ்வரி, ஆவின் தலைவர் ஏ.டி.செல்லச்சாமி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்