கள்ளக்குறிச்சியில் கிணற்றில் பிணமாக மிதந்த என்ஜினீயர் - போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சியில் என்ஜினீயர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-11-16 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் செந்தமிழ்ராஜா(வயது 23). என்ஜினீயரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில், தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க வேண்டும் என்று கூறி, பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு வ.உ.சி. நகர் அருகே உள்ள க.மாமநந்தல் சாலையோரம் உள்ள 50 அடி ஆழம் கொண்ட திறந்த வெளி கிணற்றின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அருகே சென்று பார்த்த போது, கிணற்றில் பாதி அளவில் தண்ணீர் கிடந்த நிலையில், அதில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். இதற்கிடையே, கிணற்றில் வாலிபர் பிணமாக கிடப்பது பற்றி அறிந்த கந்தசாமி தனது குடும்பத்தினருடன் அங்கு வந்து பார்த்தார். அப்போது தான், பிணமாக கிடந்தது தனது மகன் செந்தமிழ்ராஜா என்பது தெரியவந்தது. மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து செந்தமிழ்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தமிழ்ராஜா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்