கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது - வருவாய் நிர்வாக கமிஷனர் வேண்டுகோள்

கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் கொட்டக்கூடாது என வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-11-16 23:00 GMT
சென்னை,

அடையாறு ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின்கீழ் ரூ.94.76 கோடியில் பொதுப்பணித்துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு அடையாறு ஆற்றை தூர்வாருதல், சுமார் 11 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இருபகுதியிலும் வெள்ளத்தடுப்பு அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1,800 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் 8 முகத்துவாரங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடையாறு திரு.வி.க.பாலம் அருகே நடந்துவரும் இந்த பணிகளை தமிழக முதன்மைச்செயலாளரும், வருவாய் நிர்வாக கமிஷனருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

திருநீர்மலை பாலம் முதல் மறைமலைநகர் பாலம் வரையுள்ள அடையாறு ஆற்றை மீட்டெடுக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் பாலம் முதல் முகத்துவாரம் வரையுள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அடையாறு ஆற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 800 மீட்டர் வரை வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 5 முகத்துவாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக 3 முகத்துவாரங்கள் அமைக்கப்பட உள்ளன. அடையாறு கரையோரங்களில் உள்ள 11 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4 ஆயிரத்து 515 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. கோட்டூர்புரம் பாலம் முதல் திரு.வி.க. பாலம் வரை 440 மீட்டர் நீளத்துக்கான பணிகள் ரூ.14 கோடியில் நடந்து வருகிறது.

அதேபோல் கூவம் ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.93.57 கோடியில், பொதுப்பணித்துறையின் மூலம் பருத்திப்பட்டு பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை 27 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றினை தூர்வாருதல், அகலப்படுத்துதல், பேபி கால்வாய் அமைத்தல், இருபுறமும் கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளாக கண்டறியப்பட்ட 16 ஆயிரத்து 598 ஆக்கிரமிப்புகளில், இதுவரை 11 ஆயிரத்து 890 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகளை 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்