மளிகைக்கடை உரிமையாளர் கைதை கண்டித்து காங்கேயத்தில் கடை அடைப்பு போராட்டம்
மளிகைக்கடையில் திருடியவரை தாக்கியதாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்ததை கண்டித்து காங்கேயத்தில் நேற்று கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.;
காங்கேயம்,
காங்கேயத்தில் கடந்த 11-ந்தேதி இரவு ஒரு மளிகைக்கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சிகரெட் பண்டலை திருடிய ஆசாமியை கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது கடைக்காரர் மற்றும் பொதுமக்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜ் என்ற அந்த ஆசாமி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வராஜை கட்டையால் தாக்கி காயப்படுத்தியதாக மளிகைக்கடை உரிமையாளர் சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மளிகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கேயம் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்றுமுன் தினம் மாலை அவசர கூட்டம் நடத்தப் பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். மளிகைக்கடை உரிமையாளர் சுரேசை போலீசார் கைது செய்ததை கண்டித்து காங்கேயத்தில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காங்கேயத்தில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதன்காரணமாக காங்கேயம் நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காங்கேயம் பஸ்நிலையம், தினசரி மார்க்கெட் போன்ற இடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மேல் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.