தி.மு.க. கரை போட்ட சேலை அணிந்த பெண்ணை அரசு விழாவுக்கு அழைத்து வந்து திட்டமிட்டே கலாட்டா செய்தனர்- அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு குற்றச்சாட்டு
தி.மு.க. கரை போட்ட சேலை அணிந்த பெண்ணை அரசு விழாவுக்கு அழைத்து வந்து திட்டமிட்டே கலாட்டா செய்தனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு குற்றம்சாட்டினார்.
வேலூர்,
வேலூரில் நேற்று அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அணைக்கட்டு பகுதியில் நடந்த அரசு விழாவில் அந்த தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு என்னவென்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தி 1,900 மனுக்கள் வாங்கினார். அதனை அரசு அதிகாரிகளிடம் கொடுத்தோம். ஆனால் அந்த மனுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை என்று கூறினார். முதலில் கிராம சபை கூட்டம் நடத்த தி.மு.க. தலைவருக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் கட்சி சார்பில் கிராமங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தான் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து மனு வாங்கி கொடுத்துள்ளனர். அதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரம் எங்களிடம் இல்லை.
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் அரசு அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று மனுக்களை பெற்று, அதில் தகுதியுடைய பயனாளிகளை ேதர்வு செய்து நலத்திட்ட உதவிகள் கொடுத்துள்ளனர். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. கட்சி சார்பில் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று திடீரென கேட்கிறார். மேலும் அரசு விழாவில் தி.மு.க. கரைபதித்த சேலை கட்டி வந்த பெண்ணை ேமடைக்கு அழைத்து கலெக்டர் முன்னிலையில் அந்த பெண்ணிற்கு ஏன் உதவித்தொகை வழங்கவில்லை என்று கேட்கிறார்.
அ.தி.மு.க. அரசை குற்றம் சொல்ல வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் மனு வாங்குவார்கள். ஆனால் தி.மு.க.வினர் அந்த கூட்டத்தில் கட்சியினரிடம் மட்டுமே மனு வாங்கி உள்ளனர். அவர்கள் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் செல்வார்களா?.
எனவே பிரச்சினை செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்து திட்டமிட்டு கலாட்டா செய்துள்ளார். தி.மு.க.வினர் அழைத்து வந்தவர்களில் யாருமே பொதுமக்கள் கிடையாது. நாங்கள் இப்போதும்கூட அவர் கொடுத்த மனுக்களுக்கு நலத்திட்டம் கொடுக்க மாட்டோம் என்று கூறவில்லை. ஆனால் அவர்கள் அளித்த மனுவில் எவ்வளவு பேர் தேர்வாகி உள்ளனர் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். அதற்கு அவர்கள் கொடுத்த போலியான வாக்குறுதிகள் தான் காரணம். அந்த வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயார் ஆக இல்லை என்பது வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்தது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அதனால் 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.