உதயநிதி ஸ்டாலின் நாளை ராஜபாளையம் வருகை - தி.மு.க.இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்பு
ராஜபாளையம் சாஸ்தாகோவிலில் நாளை நடைபெற இருக்கும், தி.மு.க. இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகிலுள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அருகில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதுகுறித்து விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ராஜபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முறையாக மாவட்ட தி.மு.க. இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி பயிற்சி அளிக்கிறார்.
1500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், புதிய தலைமுறையினருக்கு பழைய பாரம்பரியம், கோட்பாடுகள், கட்சியின் வரலாறு குறித்து பயிற்சி அளிக்க உள்ளார். அவருடன் எம்.பி.க்கள் ராஜா மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
மேலும் கூட்டம் நடைபெறும் இடத்தினை அவர் பார்வையிட்டார். அவருடன் வடக்கு மாவட்ட செயலாளரான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ராஜபாளையம் எம்.எல்.ஏ.தங்கப்பாண்டியன், தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராசாஅருண்மொழி, முன்னாள் எம்.எல்.ஏ.தனுஷ்கோடி, தொண்டரணி செயலாளர் கருப்பழகு, கட்சி நிர்வாகிகள் ஷியாம், மணிகண்டராஜா உள்ளிட்டோரும் சென்று இருந்தனர்.