பழனியில் குண்டும், குழியுமான சாலைக்கு மலர்தூவி அஞ்சலி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

பழனியில் குண்டும், குழியுமான சாலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-11-15 22:15 GMT
பழனி, 

பழனியில், கோர்ட்டு அருகே திண்டுக்கல் ரோடு-உழவர்சந்தை சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சாலை வழியே திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், கரூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் அந்த சந்திப்பு பகுதியில் சாலை முற்றிலும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2 தினங்களாக பழனியில் பெய்த மழை காரணமாக அந்த சாலை சந்திப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் திண்டுக்கல் செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை பழனி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான ராஜமாணிக்கம் தலைமையில் நகர செயலாளர் கந்தசாமி உள்பட கட்சியினர் திண்டுக்கல் ரோடு-உழவர் சந்தை சாலை சந்திப்பு பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்களை சேதமடைந்த சாலையில் தூவி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம் நடத்தினர். அப்போது குண்டும், குழியுமாக உள்ள சாலையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்