மராட்டிய ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் இருக்கிறது சிவசேனா தாக்கு
மராட்டியத்தில் ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் உள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் உள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
ஜனாதிபதி ஆட்சி
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா' வின் தலையங்கத்தில் கடுமையாக சாடி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மராட்டியத்தில் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகாரம் இன்னமும் மறைமுகமாக பாரதீய ஜனதாவின் கைகளில் தான் உள்ளது.
ஆனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறார். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது என கூறும் பட்னாவிஸ், அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தால் அவரது எண்ணம் உண்மையானது என கூறலாம்.
அறிய முடியாத சக்தி
கவர்னர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவர் ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேர அவகாசம் மறுக்கும் போது, அவரது செயல்பாட்டில் தவறு இருப்பதாக மக்கள் நினைப்பார்கள். நாங்கள், கவர்னர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை.
முதலில் சட்டசபை காலம் முடியும் வரை கவர்னர் காத்திருந்தார். முன்கூட்டியே அவர், புதிய அரசு அமைவதற்கான நடைமுறைகளை தொடங்கியிருக்க வேண்டும். மராட்டியத்தில், தற்போது நடைபெறும் அரசியல் ஆட்டத்தை அறிய முடியாத ஒரு சக்தி கட்டுப்படுத்தி, முடிவுகள் அதன் உத்தரவுப்படியே எடுக்கப்பட்டது போல தெரிகிறது. கவர்னர் மிகவும் கனிவானவர். ஆட்சி அமைக்க தற்போது ஆறு மாத கால அவகாசத்தை அவர் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.