விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருமருகல் அருகே விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-11-14 22:30 GMT
திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் அம்பல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பல், கொங்கராயநல்லூர், பொறக் குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 647 விவசாயிகள் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்திருந்தனர். இதில் 539 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 110 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி அம்பல் அபிஷேக கட்டளை மெயின் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் பூந்தோட்டம் காரைக்கால் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர்.

பின்னர் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அம்பல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அங்கு வந்து கூட்டுறவு சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, வக்கீல் துரைபாஸ்கரன், சங்க செயலாளர் கருணாகரன் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் நாகை தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விடுபட்டுள்ளவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்