உதவியாளர் நேரடி நியமனத்தை கைவிடக்கோரி, நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உதவியாளர் நேரடி நியமனத்தை கைவிடக்கோரி தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர் பாலையன், மாநில துணைத்தலைவர் கணபதி, மாவட்ட தலைவர் அன்பழகன், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை.மதி வாணன், துணைத்தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 100 உதவியாளர்கள் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும். தகுதி உள்ள கீழ்நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு முக்கிய சேவையாற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கக்கூடாது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.