3 பேரை கொன்று அட்டகாசம் செய்த, ‘அரிசி ராஜா’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

3 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த ‘அரிசி ராஜா’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Update: 2019-11-14 22:30 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை கடந்த ஒராண்டாக சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை கடந்த மே மாதம் நவமலை மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசித்து வந்த பள்ளி மாணவி ரஞ்சனா, தொழிலாளி மாகாளி ஆகியோரை தாக்கி கொன்றது. இதற்கிடையில் தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி வந்த யானை கடந்த 9-ந்தேதி இரவு அர்த்தநாரிபாளையத்தில் விவசாயி ராதாகிருஷ்ணன் என்பரை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது.

இதை தொடர்ந்து யானையை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 10-ந்தேதி முதல் கும்கி யானைகள், மருத்துவ குழுவினர் உதவியுடன் யானையை பிடிக்கும் பணி தொடங்கியது.

அட்டகாசம் செய்து வரும் காட்டு யானை அரிசியை விரும்பி சாப்பிடுவதால் பொதுமக்கள் அந்த யானைக்கு ‘அரிசி ராஜா’ என்று பெயர் வைத்தனர். இதற்கிடையில் யானை தோட்டங்களுக்குள் வராமல் காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த 12-ந்தேதி இரவு ஆண்டியூரில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியது. மேலும் தென்னை மரங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளநீரை பறித்து குடித்தது. இதுகுறித்து பெருமாள் கோவிலில் முகாமிட்டு இருந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அங்கு செல்வதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு அரிசி ராஜா யானை புகுந்து அரசாணிக்காய்களை சாப்பிடுவதாக விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் யானை அருகில் இருந்த வாழை தோப்புக்குள் சென்றது. இதையடுத்து ஒசூரில் இருந்து வந்த கால்நடை டாக்டர் பிரகாஷ் நிலா வெளிச்சத்தில் துல்லியமாக துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினார்.

இதையடுத்து யானை பாதி மயக்கத்தில் வனப்பகுதிக்குள் செல்வதற்காக நடந்து சென்றது. வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டு இருந்த முதல் அகழியை தாண்டி, 2 அகழி வரை சென்றது. ஆனால் அதன்பிறகு யானையால் செல்ல முடியாமல் நின்றது.

இதைத்தொடர்ந்து அர்த்தநாரிபாளையத்தில் இருந்து லாரி மூலம் கும்கி யானை கலீம் யானை ஆண்டியூருக்கு கொண்டு வந்தனர். கும்கி யானை கலீம் உதவியுடன் அரிசி ராஜா யானையின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டது. அப்போது இரண்டு யானைகளும் மோதிக்கொண்டன. பின்னர் அகழியில் இருந்து அரிசி ராஜா யானையை, கும்கி யானை கலீம் தும்பிக்கையால் கயிற்றை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தது. அதன்பிறகு யானையின் 4 கால்களிலும் கயிற்றை கட்டி இழுத்து தென்னை மரங்களில் கட்டி வைக்கப்பட்டது. இதற்கிடையில் யானைக்கு மயக்கம் தெளிய தொடங்கியதால் டாக்டர்கள் மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர்.

அதன்பிறகு நேற்று காலை 7 மணிக்கு அரிசி ராஜா யானை லாரியில் ஏற்றும் பணி தொடங்கியது. கும்கி யானை கலீம் மற்றும் வனத்துறையினர் கயிற்றை பிடித்து இழுத்து லாரிக்கு அருகில் யானையை கொண்டு வந்தனர். பின்னர் அரிசி ராஜா யானையின் பின்புறமும் கும்கி யானை கலீம் நின்று முட்டி லாரிக்குள் தள்ளியது. இதையடுத்து சரியாக காலை 7.45 மணிக்கு அரிசி ராஜா யானை லாரிக்குள் எளிதாக சென்றது. பின்னர் யானை லாரி மூலம் டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு யானையை மரக்கூண்டில் அடைத்தனர். இந்த யானையை வளர்ப்பு யானையாக மாற்ற பயிற்சி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்