44 இடங்களில் வெற்றி வாகை சூடியது மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது தொண்டர்கள் கொண்டாட்டம்

44 இடங்களில் வெற்றி பெற்று மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. இதனால் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.;

Update: 2019-11-14 22:45 GMT
மங்களூரு, 

44 இடங்களில் வெற்றி பெற்று மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. இதனால் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மங்களூரு மாநகராட்சி

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளுக்கும் கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 60 வார்டுகளில் மொத்தம் 180 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சி அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஜனதாதளம்(எஸ்) வெற்றி வாய்ப்பு என கருதப்பட்ட சில வார்டுகளில் போட்டியிட்டன. அதுபோல் சுயேச்சைகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்த தேர்தலில் மொத்தம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 894 பேர் வாக்களிக்க தகுதி படைத்திருந்தனர். இதில் 59.67 சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது தேர்தலின் போது 2 லட்சத்து 35 ஆயிரத்து 628 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 84 ஆண்களும், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 527 பெண்களும், 3-ம் பாலினத்தினர் 17 பேரும் அடங்குவர்.

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மங்களூரு பாண்டேஸ்வரில் உள்ள ரோசாரியா ஆங்கிலப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் வைத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். நேரம் செல்ல செல்ல பா.ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளில் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா அமோக வெற்றி

இறுதியில் பா.ஜனதா 44 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 வார்டுகளிலும் வெற்றி வாகை சூடியது. எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிட்ட வார்டுகளில் தோல்வியை சந்தித்தது. சுயேச்சைகளும் வெற்றி பெறவில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியதை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையம் அருகில் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெற்றிக்கான சான்றிதழை பெற்ற பா.ஜனதா கவுன்சிலர்கள் 44 பேரும் திறந்த வாகனங்களில் ஊர்வலமாக கொடியல்பயல் பகுதியில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் உடன் வந்தனர்.

வெற்றி கொண்டாட்டம்

அங்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அத்துடன் மேளதாளம் இசைத்தும், நடனமாடியும் அவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதைதொடர்ந்து வெற்றி பெற்ற பா.ஜனதா கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மங்களூரு மாநகராட்சி, கடந்த 1983, 1990, 2002, 2013-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வசம் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதா மீண்டும் மங்களூரு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் 35 இடங்களிலும், பா.ஜனதா 20 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் செய்திகள்