இந்த ஆண்டு ‘சைல்டுலைன்’ அமைப்பு மூலம் 315 குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது திட்ட இயக்குனர் மைக்கேல் ராஜ் தகவல்

குமரி மாவட்டத்தில் ‘சைல்டுலைன்‘ அமைப்பு மூலம் இந்த ஆண்டு 315 குழந்தைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குனர் மைக்கேல் ராஜ் கூறினார்.

Update: 2019-11-14 15:19 GMT
நாகர்கோவில், 

இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

315 குழந்தைகளுக்கு பாதுகாப்பு

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குழந்தைகள் உதவி மையமான சைல்டுலைன் அமைப்பின் போன் நம்பரான 1098-க்கு மொத்தம் 1743 அழைப்புகள் வந்துள்ளன. அதன்மூலம் 315 குழந்தைகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்த 26 குழந்தைகள், குழந்தை தொழிலாளர் பிரச்சினைகளில் இருந்த 19 குழந்தைகள், பிச்சை எடுப்பதற்கு ஆளாக்கப்பட்ட 48 குழந்தைகள், மனநலம் ஆற்றுப்படுத்துதல் தேவைப்பட்ட 89 குழந்தைகள், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்த 40 குழந்தைகள், வீட்டை விட்டு ஓடி வந்த 2 குழந்தைகள், குழந்தை திருமணங்களில் இருந்து 6 குழந்தைகள், பாலியல் வன்முறையில் இருந்து 7 குழந்தைகள் உள்பட 315 குழந்தைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினம் 14-ந் தேதி(இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 20-ந் தேதி வரை குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நட்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெவ்வேறு பகுதிகளில் நடக்கிறது. அதன்படி ஓவியப்போட்டி, பட்டிமன்றம், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இலவச தொலைபேசி சேவை

சைல்டுலைன் ஒருங்கிணைப்பு இயக்குனர் ஆனி பெர்பட் சோபி கூறும்போது, “ குழந்தைகளின் உரிமைகளை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது“ என்றார். அப்போது சைல்டுலைன் நிர்வாகி கேத்தரின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்