திருவையாறு அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சிறுவன் கைது
திருவையாறு அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராணி(வயது25). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் ராணி தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள அடிபம்பு அருகே குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் ராணி குளிப்பதை மறைந்திருந்து பார்த்து ரசித்து தனது செல்போனில் படம் பிடித்தான்.
இதைக்கண்ட ராணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து சிறுவன் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராணி திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராணி குளிப்பதை சிறுவன் செல்போனில் படம் பிடித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.