இரு மாநகராட்சிகள் உள்பட 14 அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது பலத்த போலீஸ் பாதுகாப்பு

இரு மாநகராட்சிகள் உள்பட 14 அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2019-11-13 22:00 GMT
பெங்களூரு, 

இரு மாநகராட்சிகள் உள்பட 14 அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங் களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்

கர்நாடகத்தில் மங்களூரு, தாவணகெரே ஆகிய 2 மாநகராட்சிகள், 6 நகரசபை, 3 புரசபை மற்றும் 3 பட்டண பஞ்சாயத்து உள்ளிட்ட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. 409 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 475 சுயேச்சைகள், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 1,587 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் தாவணகெரே மாநகராட்சி தேர்தலில் 56.31 சதவீத வாக்குகளும், மங்களூரு மாநகராட்சியில் 59.57 சதவீத வாக்குகளும் பதிவாகின. நகரசபைகளை பொறுத்தமட்டில் கனகபுராவில் 69.71 சதவீத வாக்குகளும், கோலாரில் 68.15 சதவீதமும், முல்பாகலுவில் 74.28 சதவீதமும், ராபர்ட்சன்பேட்டையில் 56.51 சதவீத வாக்குகளும், கவுரிபித்தனூரில் 75.31 சதவீத வாக்குகளும், சிந்தாமணியில் 65.31 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின. மொத்தமாக சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு தாலுகா தலைநகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து இன்று(வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை வரை நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்குள் முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்