திம்பம் மலைப்பாதையில், பாறை மீது லாரி மோதியது; டிரைவர் சாவு - 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் பாறை மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ள இந்த ரோட்டில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து கோவைக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருப்பூரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 42) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது சாலை ஓரத்தில் இருந்த பாறை மீது லாரி பயங்கரமாக மோதியது.
இதில் லாரியில் இருந்த மூட்டைகள் சிதறி ரோட்டில் விழுந்தன. டிரைவர் ஸ்ரீதர் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். வலி தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா” என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனே ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று ஸ்ரீதரை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஸ்ரீதர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விபத்தால் திம்பம் மலைப்பாதை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும் கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் ரோட்டின் இருபுறமும் இரு மாநில பஸ்கள், காய்கறி லாரிகள், வேன்கள் 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. விபத்து காரணமாக தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.