ரூ.21 லட்சம் வாடகை பாக்கி: விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு ‘சீல்’

ரூ.21 லட்சம் வாடகை பாக்கி செலுத்தப்படாததால், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதி காரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2019-11-12 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில் அமைந்துள்ள கடைகள், தனி நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒரு சிலர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அதுபோன்ற கடைகளை கண்டுபிடித்து, வாடகை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் 15 கடைகள் உள்ளன. இதில் ரெயில்வே கேட் உள்ளிட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 9 கடைகளுக்கு வாடகை செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த 9 கடைகளுக்கும் மொத்தம் ரூ.21 லட்சத்து 39 ஆயிரத்து 778 வாடகை பாக்கி இருந்தது.

எனவே, வாடகை பாக்கியை முழுமையாக செலுத்தும்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும், 9 கடைகளுக்கும் உரிய வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் அனிதா தலைமையில், கோவில் செயல் அலுவலர் சுகன்யா, சரக ஆய்வாளர் உமா மற்றும் அதிகாரிகள் நேற்று பாலகிருஷ்ணாபுரத்துக்கு வந்தனர்.

இதையடுத்து வாடகை செலுத்தப்படாத 9 கடைகளையும், போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். 

மேலும் செய்திகள்