பிரபல சினிமா பாடகி லதா மங்கேஷ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி - தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு
சினிமா பாடகி லதா மங்கேஷ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பை,
பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி 90 வயதை எட்டினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுவாச பிரச்சினையால் அவதிப்பட்ட அவரை உடனடியாக மும்பை பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லதா மங்கேஷ்கரின் உடல் நிலை குறித்து அவரது இளைய சகோதரி உஷா மங்கேஷ்கர் கூறுகையில், “வைரஸ் தொற்று காரணமாக எனது சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நாளை(இன்று) சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்” என்றார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1929-ம் ஆண்டு பிறந்தவர் லதா மங்கேஷ்கர், இந்தியில் மட்டும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார்.
திரைத்துறையில் அவருடைய பங்களிப்பை பாராட்டும் வகையில், 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.