சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது
சென்னை ஐஸ்அவுசில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை கழுத்தை அறுத்துக் கொன்ற தம்பிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை ஐஸ்அவுஸ் அயோத்தியா நகர் 29-வது பிளாக்கை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருடைய சகோதரர்கள் ஞானவேல் (45), கந்தவேல் (37) திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அண்ணன்- தம்பிகள் இடையே குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் சக்திவேல் குடிபோதையில் தம்பி மனைவிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சக்திவேல் நேற்று காலை மீண்டும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பிகள் 2 பேரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைக்குலைந்து கீழே விழுந்தார்.
ஆத்திரத்தில் உடன்பிறந்த அண்ணன் என்றும் பாராமல் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான சக்திவேல் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பிகள் ஞானவேல், கந்தவேல் ஆகியோர் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வெங்கட் ரங்கம் பிள்ளை தெரு அருகே நின்றுக் கொண்டிருப்பதாக ஐஸ்அவுஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், 2 பேரையும் கைது செய்து மெரினா போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தார்.