செக்கானூரணி பஸ்நிலையத்தில் எம்.பி. ஆய்வு

செக்கானூரணி பஸ் நிலையத்தில் சுகாதாரம் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.;

Update: 2019-11-10 22:45 GMT
செக்கானூரணி, 

மதுரை-போடி ரெயில் பாதையில் செக்கானூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையம் இருந்தது. தற்போது மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் செக்கானூரணி ரெயில் நிலையத்தை அகற்றி விட்டனர். அதைத்தொடர்ந்து மீண்டும் ரெயில் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செக்கானூரணி ரெயில் நிலையம் இருந்த இடத்தை பார்வையிட்டார். பின்பு செக்கானூரணியில் உள்ள பஸ்நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு செய்த எம்.பி., அங்கு குப்பை மேடுகள் உருவாகி உள்ளதை கண்டு சுகாதார அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ஊருக்குள் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தொடர்ந்து அங்கிருந்த குப்பைமேடு அகற்றப்பட்டு, பஸ்நிலையத்திற்குள் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது.

மேலும் அந்த பகுதி மக்கள் எம்.பி.யிடம் கூறியதாவது, பஸ்நிலைய பகுதியில் அங்கன்வாடி, பத்திரபதிவு அலுவலகம், குடி தண்ணீர் தொட்டி, மேலும் மதுரையிலிருந்து கம்பம், கேரளா வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் செக்கானூரணி பஸ்நிலையத்தில் நின்று செல்கிறது. இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு குப்பைகள் அகற்றப்பட்டு சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றனர்.

அதைத்தொடர்ந்து எம்.பி. கலெக்டர் வினய்யிடம் இதுபற்றி கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயராம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், சுப்பிரமணியன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் சரவணபகவான், முன்னாள் மாவட்ட தலைவர் பிரபாகரன் வட்டார தலைவர்கள் இளங்கோவன், முருகேசன், பொது செயலாளர் அன்னக்கொடி மற்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்