திருச்சியில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி 700 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

திருச்சியில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் 700 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2019-11-10 22:45 GMT
திருச்சி,

சர்வதேச தற்காப்பு கலை கழகத்தின் இந்திய பிரிவு சார்பில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு இந்திய கராத்தே சங்கத்தின் தொழில்நுட்ப ஆணைய உறுப்பினர் எஸ்.கே.இளஞ்செழியன் தலைமை தாங்கினார். போட்டிகளை திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரபு தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சுமார் 700 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகள் 7 வயதுக்கு உட்பட்டவர்கள், 8-9, 10-11, 12-13, 14-15 மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல பிரிவுகளாக நடந்தன.

செயல்முறை விளக்கமான கட்டா மற்றும் குவிட்டே என்ற இரு வகைகளில் நடந்த இந்த போட்டிகளில் முதல், இரண்டாவது இடம் மற்றும் 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை இந்திய கராத்தே சங்கத்தின் இயக்குனர் கராத்தே தியாகராஜன் வழங்கினார். குழு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப் பட்டது.

7 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு போட்டியில் திருச்சியை சேர்ந்த தனுஷ்கா என்ற மாணவி முதலிடத்தையும், கோவையை சேர்ந்த கீதா லோச்சனா இரண்டாவது இடத்தையும், அனன்யா, நிதி ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டிகளுக்கு சர்வதேச தற்காப்பு கலை கழகத்தின் தலைவர் சைரஸ் மதானி, முத்துராஜூ, பாபு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தொடக்கத்தில் சர்வதேச தற்காப்பு கலை கழகத்தின் இந்திய தலைவர் காளசன் இளஞ்செழியன் வரவேற்றார். முடிவில் தயாபரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்