காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே கைகலப்பு
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோவிலில் உற்சவ மூர்த்திகள் முன்பாக வழிபாடு செய்யும் விதமாக தென்கலை பிரிவினர் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர்.
அதே கோவிலில் பெருமாளுக்கு பூஜை செய்யும் வடகலை பிரிவை சேர்ந்தவர்கள், தென்கலை தரப்பினரை தடுத்து அவர்களை பிரபந்தங்களை பாடக் கூடாது என தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக இரு பிரி வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார், வருவாய் துறையினர், கோவில் அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் இருதரப்பினரும் போட்டிப்போட்டு பிரபந்தங்களை சத்தமாக பாடி சாமியை வழிபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.
பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் விழா காலங்களின் போது தொடர்ந்து இருதரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.