கடல் மீன் வளர்ப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் - துணைவேந்தர் பேச்சு

கடல் மீன் வளர்ப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் என்று பல்கலைகழக துணைவேந்தர் பேசினார்.;

Update: 2019-11-06 22:30 GMT
பனைக்குளம்,

மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு கடல் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த 21 நாட்களுக்கான குளிர்கால பயிற்சி முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் தலைமையுரை ஆற்றினார். விழாவில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் குமரகுரு பேசியதாவது:-

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையானது 135 கோடியாக உள்ளது.உலகளவில் 146 கோடி மக்கள் தொகையுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.கடந்த 20 வருடத்தில் மட்டும் இந்தியாவில் 40 கோடி மக்கள் தொகை அதிகரித்துள்ளது.ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான உணவுகள் முழுமையாக கிடைக்கி்றதா என்றால் அது உறுதியாக சொல்ல முடியாது. அதிலும் புரதச்சத்துள்ள உணவுகள் கிடைப்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இதனால் குழந்தைகள் வளர்ச்சியின்மை,எடை குறைவு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்கறிகளை விட மாமிசத்தில் தான் அதிகஅளவில் புரதச்சத்து உள்ளது. அதிலும் குறிப்பாக மீன்களில் தான் அதிகமான புரதச்சத்து உள்ளது.உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கடல் வளம் குறைந்து வருகி்றது.அது போல் இந்தியாவிலும் கடல் வளம் நாளுக்கு நாள் குறைந்து தான் வருகின்றது.தமிழக கடல் பகுதியிலும் அதே நிலைமை தான்.மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையிலோ கடல் வளமோ அதே நிலையில் தான் இருந்து வருகிறது.

இதனால் உலகளவில் மீன்களக்கான தேவை அதிகமாகிறது.உலகளவில் கடல் மீன் பிடிப்பில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. எனவே மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப அவர்களுக்கு புரதச்சத்துள்ள தேவையான உணவுகளை வழங்குவது குறித்தும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் படி புரதச்சத்து அதிகம் கொண்ட மீன்களை உற்பத்தி செய்வதில் இந்தியா முழுவதும் உள்ள மத்தியகடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி விஞ்ஞானிகளின் ஆலோசனையின்படி சில மீனவர்களே கடல் மீன் உற்பத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் கடல் மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்.இதன் மூலம் கடல்வளம் குறையாமல் பாதுகாப்பதோடு மீன் வளமும் அதிகம் கிடைக்கும்.

கடல் மீன் உற்பத்தி செய்வது குறித்து நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு பயிற்சியில் பங்கேற்றுள்ள 6 மாநில விஞ்ஞானிகள் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் கொடுக்கும் இந்த பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்தி கொள்வதோடு கடல் மீன் உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.கடல் மீன் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில் மூத்த விஞ்ஞானி தமிழ்மணி நன்றி கூறினார். விழாவில் சென்னையில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி அப்துல்நாசர்,கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவர் கோபக்குமார்,விஞ்ஞானி ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்