புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, லாரியில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-06 22:30 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடி அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி, போலீசார் சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டிகளில் 4,320 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் அடுத்த நெடிமொழியனூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகம் (வயது 38) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சண்முகம் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டலாரியை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்