கொடைக்கானல் பகுதியில், கேரட் விளைச்சல் அமோகம் - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளான பூண்டி, பூம்பாறை, கவுஞ்சி, மன்னவனூர், கூக்கால், குண்டுப்பட்டி, பழம்புத்தூர், புதுப்புதூர் போன்ற பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர்களில் கேரட் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக கேரட் பயிரிட்டு 120 நாட்களில் விளைச்சலுக்கு வரும்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட்டுகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கடந்த மாதம் அதிக மழை பெய்ததின் காரணமாக கேரட் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக கேரட்டை அழுகல்நோய் தாக்கியுள்ளது.
கொடைக்கானலில் விளையும் கேரட் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.7 முதல் ரூ.10 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. கேரட் குறைந்தது ரூ.30-க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அறுவடை கூலி, வாடகை, கமிஷன் என பார்த்தால் ஒன்றும் மிஞ்சுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே கேரட்டுக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.