கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்களை வரவிடாமல் தடுப்பது யார்? முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கேள்வி
கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்களை வரவிடாமல் தடுப்பது யார்? என்று முதல்-அமைச்சருக்கு கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி, கவர்னர் கிரண்பெடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். போட்டி அரசு நடத்த முயற்சி செய்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தும்போது மட்டும் விதி சரியாக பொருந்துகிறது. சட்ட விதிகளில் பொய்க்கு இடமில்லை. ஆனால் இவற்றை செய்து கொண்டு இருப்பது யார்? கவர்னர் மாளிகைக்கு வந்து கவர்னரை சந்திக்க வரும் அமைச்சர்களை வரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்? இதனால் அவர்கள் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வந்து சந்தித்துவிட்டு தாங்கள் வந்ததை சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு செல்கின்றனர். இது எந்த வகையில் சட்ட விதிகளில் பொருந்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.