டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி கடலையூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மகேந்திரன் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது உதவி கலெக்டர் விஜயா அலுவலகத்தில் இல்லை. இதனால் அவர் வரும் வரை அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.
மதியம் உதவி கலெக்டர் விஜயா அலுவலகம் வந்தார். அவர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட பகுதியை நான் நாளை நேரில் வந்து ஆய்வு செய்கிறேன். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கழுகுமலையை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் முத்துமாரி என்பவர் கடந்த மாதம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள சுகாதார ஆய்வாளர், சுப்பிரமணியனிடம் இழப்பீடு மற்றும் சான்றிதழுக்கு ஏற்பாடு செய்வதாக விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், சுகாதார ஆய்வாளர் எதற்காக கையெழுத்து வாங்கினார் என்பதை தெரிவிக்க கோரியும் பா.ம.க. மாநில துணை செயலாளர் ராமசந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் வேலுசாமி, நகர செயலாளர் கருப்பசாமி மற்றும் ஊர்மக்கள் பலர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதி இதுகுறித்து உதவி கலெக்டரிடம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.